நம்நாடு பாதுகாப்பான கைகளில் இருக்கிறதா என்பதே சந்தேகமாக இருக்கிறது. இன்னும் சில ஆண்டுகளில் சிலர் நம் நாட்டையே விற்றாலும் வியப்பதற்கு ஒன்றுமில்லை. - அர்விந்த் கெஜ்ரிவால்

நம் நாடு இயற்கை வளங்கள் நிறைந்த நாடு. பாலும் தேனும் ஆறாகப் பெருகி
ஓடிய நாடு என்று அந்த நாளையை நம் நாட்டைப் பற்றிப் கவிஞர்கள் பாடியிருக்கிறார்கள். எங்கே போயிற்று
அத்தனை செல்வங்களும்? அன்றைக்கு வெள்ளையன் கொண்டு போனான். இன்று நம்மவர்கள்
நம்மிடமிருந்தே கொள்ளை அடிக்கிறார்கள்.
திரு அரவிந்த் கெஜ்ரிவால். தனது ‘தன்னாட்சி’ புத்தகத்தில் நிலங்கள் எவ்வாறு அப்பாவி
மக்களை ஏமாற்றி தொழில் நிறுவனங்களுக்குக் கொடுக்கப் படுகின்றன என்பதை மிக
விளக்கமாக எழுதுகிறார்:
நிலம் கையகப்படுத்துதல் என்பதை நாம் நன்றாகப் புரிந்து கொள்ளவேண்டும்.
ஒரு கிராமத்தில் இருக்கும் நிலம் தனக்கு வேண்டும் என்று நினைக்கும் தொழில்
நிறுவனம் நேரடியாக இந்தக் கிராமத்திற்கு வருவதில்லை. அந்த மாநில அரசை நாடுகிறது.
ஒரு ஊழல் அரசியல்வாதி அல்லது ஒரு அரசு அதிகாரி தனக்கு வேண்டிய லஞ்சத்தை வாங்கிக்
கொண்டு நிலத்தைக் கையகப்படுத்த அனுமதி கொடுத்துவிடுகிறார். நிலத்தின்
சொந்தக்காரருக்கு இதைப்பற்றித் தெரிய வருவதேயில்லை. அரசு இயந்திரத்தின் அதிகாரம்,
காவல் துறையினரின் பலம் இவற்றைப் பயன்படுத்தி நிலச் சொந்தக்காரர் அவரது
நிலத்திலிருந்து விரட்டியடிக்கப்படுகின்றனர்.
தொழில் நிறுவனங்கள் கையூட்டு வழங்க தயாராக இருந்தால் உடனடியாக
அவர்களுக்கு நிலம் கிடைத்துவிடுகிறது. அரசின் அங்கீகாரம், அனுமதி எல்லாம் வெறும்
கண் துடைப்பு. மக்களின் தொந்த நிலங்களே அவர்களது கட்டுப்பாட்டில் இல்லை என்பது
தான் நிதர்சனம். நில ஆக்கிரமிப்பு பற்றிப் பேசும்போது ஒட்டுமொத்த நாடும் அபாயத்தில்
உள்ளது என்றே சொல்லவேண்டும். மக்களின் விருப்பத்திற்கு மாறாக நிலங்கள் பலவந்தமாக
அவர்களிடமிருந்து பறிக்கப்படுகின்றன.
மக்கள் ஏன் தங்கள் நிலங்களைக் கொடுக்க விரும்புவதில்லை?
·
அரசு தங்களுடைய விருப்பத்திற்கு எதிராக நிலங்களை அபகரித்து தொழில்
நிறுவனங்களுக்குக் கொடுப்பதை எந்த விவசாயியும் விரும்புவதில்லை. தங்களுக்கு என்ன
ஆதாயம் என்று விவசாயிகள் கேட்கிறார்கள். அரசு இந்தக் கேள்விக்கு பதில்
கொடுப்பதில்லை.
·
தொழில் நிறுவனங்களின் ஆதாரத்திற்காக அரசு இப்படிச் செய்வதை மக்கள்
எதிர்க்கிறார்கள். தாங்கள் தேர்ந்தெடுத்த பிரதிநிதிகளைக் கொண்ட அரசு தங்களுக்கு
எதிராக செயல்படுகிறதே என்று மக்கள் அதிர்ச்சி அடைகிறார்கள்.
·
நிலங்களைக் கையகப்படுத்தும் போது அரசு சம்மந்தப்பட்டவர்களைக்
கலந்தாலோசித்து விலைகளை நிர்ணயம் செய்வதில்லை. தங்கள் நிலங்களுக்கு நல்ல விலை
எதிர்பார்க்கும் விவசாயி ஏமாற்றம் அடைகிறான். மேலும், இந்தப் பணம் அவனுக்கு வந்து
சேர பல வருடங்கள் ஆகின்றன.
·
பழங்குடி மக்களுக்கு தெரிந்த ஒரே தொழில் விவசாயம் மட்டுமே. அவர்களது
நிலங்களுக்கு லட்ச ரூபாய் கிடைத்தாலும் 'குந்தித் தின்றால் குன்றும் கரையும்' அல்லவா? அடுத்த
தலைமுறையினரும் வேறு எந்தத் தொழிலும் கற்றுக் கொள்ளாமல் போவதால் அந்தக் குடும்பமே
நசித்துப் போகும்.
·
நிலச் சொந்தக்காரர்களுக்குப் பணம் கிடைத்தாலும், அந்த நிலத்தில் வேலை
செய்தவர்கள், கடை வைத்திருந்தவர்களுக்கு எதுவும் கிடைக்காது. அவர்களது
வருமானத்திற்கு அரசு பொறுப்பேற்பதில்லை.
·
நில அபகரிப்பினால் அல்லது குறைந்த விலையில் நிலங்களை
கையகப்படுத்துவதனால் தொழில் நிறுவனங்களுக்கு நல்ல லாபம் கிடைக்கிறது. அரசு
அதிகாரிகளுக்கும் கையூட்டு கிடைக்கிறது. ஆனால் இத்தனை வருடங்கள் அந்த நிலங்களை நம்பி
வாழ்ந்தவர்கள் நிலை குலைந்து போகிறார்கள். படிப்பறிவு அதிகம் இல்லாததால் இவர்களது
நிலங்களில் அமைக்கப் படும் தொழில் நிறுவனங்களில் இவர்களுக்கு வேலை கிடைக்காது.
·
உடல் உழைப்பை நம்பி வாழ்ந்து வந்தவர்கள் இந்தத் தொழிற்சாலைகளில் பகல்/இரவு
நேர பாதுகாப்பாளர்கள் ஆக வேலை செய்ய ஆரம்பிக்கிறார்கள். இதுவரை இல்லாத நோய்கள்
எல்லாம் அவர்களை அண்டுகின்றன. சொந்த நிலமும் போய், வியாதிகளும் சூழ விவசாயி
திண்டாடுகிறான்.
நம் நாட்டில் இயற்கை வளங்களுக்கு இணையாக கனிம வளங்களும் ஏராளமாகக்
கிடைக்கின்றன. இவை ஒருநாளில் உண்டானவை அல்ல. பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளில்
இயற்கையாக உருவானவை. அரசிடமிருந்து மிகக் குறைந்த விலைக்கு அவற்றை வாங்கி தனியார்
நிறுவனங்கள் இவற்றை சர்வதேச சந்தையில் நல்ல லாபத்திற்கு விற்றுக்
கொண்டிருக்கின்றன. நிலங்களை கையகப்படுத்துவது போலவே கனிம வளங்களும் கொள்ளையடிக்கப்படுகின்றன. ஓரிடத்தில் கனிமம்
கிடைக்கிறது என்றால் அசுர வேகத்தில் இந்தத் தனியார் நிறுவனங்கள் அவற்றை வெட்டி
எடுத்து விற்றுவிடுகின்றன. இந்த வேகத்தில் போனால் இன்னும் சிலவருடங்களில் கனிமம்
இல்லாமலேயே போய்விடும் அபாயம் இருக்கிறது.
இதையெல்லாம் பார்க்கும் போது, நமது இயற்கை வளங்கள், கனிம வளங்கள் இவை
சில அரசியல்வாதிகள், சில அரசு அதிகாரிகளின் ஆதிக்கத்தில் பாதுகாப்பாக இல்லை என்று வெளிப்படையாகத்
தெரிகிறது. நம்நாடு பாதுகாப்பான கைகளில் இருக்கிறதா என்பதே சந்தேகமாக இருக்கிறது. இன்னும்
சில ஆண்டுகளில் சிலர் நம் நாட்டையே விற்றாலும் வியப்பதற்கு ஒன்றுமில்லை. தனது புத்தகத்தில் மிகுந்த வேதனையுடன் இதை எழுதுகிறார் நம் தலைவர்.
கனிம வளங்களைக் கொள்ளையடிப்பவர்கள் அந்தப் பகுதிகளில் பல ஆண்டுகளாக
வாழ்ந்துவரும் மக்களையும் வெளியேற்றுகிறார்கள். பழங்குடியினருக்குச் சொந்தமான
ஏராளமான நிலங்கள் தனியார் நிறுவனங்களுக்குக் கொடுக்கப்படுகின்றன. கொள்ளையடிக்கப்
பட்ட நிலங்களிலிருந்து இந்த நிறுவனங்கள் கொள்ளை லாபம் அடிக்கின்றன. ஆனால்
நிலத்தைக் கொடுத்த மக்கள் பாவம் வேலைவாய்ப்பு இல்லாமல் பசி, பட்டினி என்று
துன்பப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். அவர்களுடைய சமூகம் அவர்களது கிராமங்கள்
சீக்கிரமே சீரழிந்து போகின்றன.
மக்களை துன்புறுத்துவதுடன் சுற்றுகொண்டுச்சூழலையும் மாசுபடுத்துகின்றன
இந்த நிறுவனங்கள். சுற்றுச்சூழலை பாதுகாக்க எந்தவித நடவடிக்கையும்
எடுக்கப்படுவதில்லை. மக்கள் அரசு அதிகாரிகளை அணுகி தங்கள் குறைகளைச் சொன்னாலும் இவரகளின்
புகார்கள் கவனிக்கப்படுவதேயில்லை. தனியார் நிறுவனங்கள் அரசு அதிகாரிகளை நன்றாகக்
கவனித்துக் கொண்டு விடுகின்றன. இனிமேல் மக்கள் எப்படிப் போனால் என்ன?
நிலம், கனிம வளங்களுக்கு என்ன கதி உண்டாயிற்றோ அதே கதிதான் நமது
காடுகளுக்கும். திரு ஏ.கெ. என்ன கூறுகிறார் என்று அடுத்த பகுதியில் பார்ப்போம்.