நம்மைச் சுற்றி இருப்பவர்கள் துன்பப்படும்போது நாம் ஒருவர் மட்டும் மகிழ்ச்சியாக இருக்க முடியாது - இளங்கோ.
இத்தனை தூரம் பேசப்படும் தன்னாட்சி நம் நாட்டில் எங்காவது இருக்கிறதா?
இதனை வெற்றிகரமாக யாராவது செயல்படுத்தி இருக்கிறார்களா? இல்லை இது வெறும்
கனவுதானா? இந்த கேள்விகளுக்கு தனது ‘தன்னாட்சி’ புத்தகத்தில் பதில் அளிக்கிறார்
திரு அரவிந்த் கெஜ்ரிவால்
அவர் இங்கு உதாரணமாகக் காட்டுவது திரு இளங்கோ என்ற ஒரு இளைஞரைப்
பற்றி. யார் இவர்?
குத்தம்பாக்கம் நினைவிருக்கிறதா? சென்னையின் குப்பைகளையெல்லாம்
கொட்டுவதற்கு என்று தேர்ந்தெடுத்தார்களே, அந்த குத்தம்பாக்கத்தில் நவம்பர் 12 ஆம் தேதி 1960 ஆம் வருடம் பிறந்தவர் இளங்கோ. இவரது தந்தை ஒரு
அரசு ஊழியர். இவரது குடும்பத்திற்கு குத்தம்பாக்கத்தில் கொஞ்சம் நிலங்கள் இருந்தன.
அதனால் இவரது குடும்பம் சற்று சுமாரான நிலையில் இருந்தது என்று சொல்லலாம். சிறு
வயதில் தன் கிராமத்தில் சுற்றிவர இருந்த குடும்பங்களில் குடிகாரக் கணவன்மார்கள்,
மனைவியையும் குழந்தைகளையும் கண்மண் தெரியாமல் அடிக்கும் ஆண்கள் என்றே
பார்த்து வளர்ந்து வந்தார் இளங்கோ.
‘பள்ளிக்கூடத்தில் மதிய உணவு
இடைவெளியின் போது என்னுடைய வகுப்புத் தோழர்கள் பலர் வெறும் நீரைக் குடித்து
பசியைப் போக்கிக் கொள்வதை பார்த்திருக்கிறேன். என்னுடைய உணவை அவர்களுடன்
பங்கிட்டுக் கொள்வேன். ஆனால் இது ஒரு தீர்வு அல்ல என்று எனக்கு அந்த வயதிலேயே
தோன்றியிருக்கிறது. நம்மைச் சுற்றி இருப்பவர்கள் துன்பப்படும்போது நாம் ஒருவர்
மட்டும் மகிழ்ச்சியாக இருக்க முடியாது என்பதை அப்போதே உணர்ந்தவன் நான்’ என்கிறார்
இளங்கோ.
நன்றாகப் படித்து வந்த இவருக்கு சென்னையில்
ஏ.சி. டெக்னாலஜி கல்லூரியில் இரசாயன பொறியியல் படிக்க வாய்ப்புக் கிடைத்தது.
சிறிது காலம் கல்லூரி விடுதியில் தங்கிப் படித்தார். ஆனால் சொந்த ஊரை, அந்த ஊரின்
மக்களை விட்டுவிட்டு தான் மட்டும் சுகப்படுவதா என்று தோன்றவே மறுபடியும்
கிராமத்திற்கே வந்தார். பேருந்துகள் மாறி மாறி காலை மாலை இருவேளையும் சொந்த
ஊரிலிருந்தே கல்லூரிக்குப் போய்வந்தார். தன் வயதையொத்த இளைஞர்களுடன் சேர்ந்து
கிராமத்தில் நற்பணிகள் செய்ய ஆரம்பித்தார். எப்படியாவது தனது பிறந்த ஊரை,
அம்மண்ணின் மைந்தர்களை முன்னேற்ற வேண்டும் என்ற ஆதங்கம் இவருக்கு இருந்தது.
இளைஞர் அணியை அமைத்து சிறுவர்களுக்கு
பாடங்கள் சொல்லித் தருதல், படிப்பதற்கான குழுக்கள் அமைத்தல்,
மனமாற்றத்தைத் தரும் வாக்கியங்களை எழுதி சுவரொட்டி தயாரித்தல் என்று
பல சமூக சேவைகளைச் செய்த வண்ணம் இருந்தார். குத்தம்பாக்கத்தின் முதல் பட்டதாரி
என்ற பெருமையைப் பெற்ற இளங்கோ, படிப்பை
முடித்தவுடன் ஒரிசாவில் வேலைக்கு சேர்ந்தார். சொந்த ஊருக்கு ஒருமுறை விடுமுறையில்
வந்தவருக்கு தன் கிராமத்தில் தனக்கு நிறைய வேலை இருக்கிறது என்று உணர்ந்தார்.
சென்னையில் உள்ள மத்திய அறிவியல் ஆராய்ச்சிக் கழகத்தில் வேலையை மாற்றிக் கொண்டு
மறுபடியும் தன் கிராமத்திற்கு வந்துவிட்டார்.
இளங்கோவிற்கு திருமணம் ஆயிற்று. இவரது
மனைவி சுமதியும் இராசயானத்தில் பட்டப்படிப்பு படித்தவர். இரண்டு குழந்தைகளுக்குத்
தந்தை ஆனார். இவரும் இவரது மனைவி சுமதியும் ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டனர்.
அதன்படி சென்னையில் வீடு பார்த்து அங்கு வாழ்க்கையைத் தொடங்குவது. சுமதி
மேல்படிப்பைத் தொடருவது. அவருக்கு வேலை கிடைக்கும் வரை இளங்கோ குடும்பத்தைப்
பார்த்துக் கொள்வது. சுமதிக்கு வேலை கிடைத்தபின் இளங்கோ கிராமத்திற்குத் திரும்புவது
என்பதே அந்த ஒப்பந்தம்.
மனைவியின் நூறு சதவிகிதப்
புரிதலுடனும், ஆதரவுடனும் அவருக்கு வேலை கிடைத்தபின் மறுபடி கிராமத்திற்கு வந்தார்
இளங்கோ. 1996 ஆம் ஆண்டு குத்தம்பாக்கத்தில் பஞ்சாயத்து தேர்தல் வந்தபோது யாருமே
தேர்தலில் போட்டியிட முன்வரவில்லை. இளங்கோ தனது அரசு வேலையை ராஜினாமா செய்துவிட்டு
தேர்தலில் நின்றார். வென்றார்.
பஞ்சாயத்துத் தலைவருக்கு கிடைத்த
அதிகாரத்தை முழுக்க முழுக்க புரிந்து கொண்டு பிரமிக்க வைக்கும் பணிகளைச்
செய்திருக்கிறார் இவர். இவரது தலைமையின் கீழ் கிராம மக்கள் அனைவரும் இணைந்து
பணிகளைச் செய்கிறார்கள். இந்தக் கிராமத்தில் அனைத்து சாதியினரும் இருக்கின்றனர்.
இளங்கோ தனது சிறிய வயதில் இந்த சாதியினர் ஒற்றுமையின்றி ஒருவருக்கொருவர் சண்டை
போட்டதைப் பார்த்திருக்கிறார். எப்போதும் சாக் கலவரம் தான் இங்கு. ஆரம்ப
காலங்களில் ஒவ்வொவொரு சாதியினரிடமும் சமாதானமாகப் பேசி ஒருவரோடொருவர் ஒற்றுமையுடன்
வாழ்வதினால் உண்டாகும் நன்மைகளை எடுத்துச் சொல்லி புரிய வைப்பது இவருக்கு ஒரு சவாலாக இருந்தது. தமது
கிராம மக்களுக்கு உடனடித்தேவை வேலை வாய்ப்பு மற்றும் நம்மால் முடியும் என்ற
நம்பிக்கை என்று உணர்ந்தார்.
குத்தம்பாக்கத்தில் சுமார் 1000
குடும்பங்கள் இருக்கின்றன. ஒவ்வொரு மாதமும் தன் கிராமத்திற்கு 50 லட்சம் ரூபாய்
மதிப்புள்ள பொருட்கள் தேவை என்று கணக்குப் போட்டார். இவைகளில் 80% பொருட்களை
தாங்களே தயாரித்துக் கொள்ள முடியும் என்று இவருக்குப் புரிந்தது. தினசரி தேவைகளான
சோப்பு, எண்ணெய் முதலியவைகளைத் தயாரிக்க கிராம மக்களை ஊக்குவித்தார். தன்னிறைவு
பெறமுடியும் என்பதுடன் கிராம மக்களுக்கு நிரந்தர வருமானமும் கிடைக்கும் என்று இவர்
போட்ட கணக்கு இன்று வெற்றி பெற்றிருக்கிறது.
கிராமம் முழுவதும் சமத்துவபுரம்
வீடுகளைக் கட்டினார். இந்த வீடுகளைக் கட்டிக்கொடுக்கும் நிறுவனமான ஹட்கோவுடன்
இவரும் இணைந்து நல்லமுறையில் வீடுகளை வடிவமைத்துக் கொடுத்தார். வீடுகளைக்
கட்டத்தேவையான மண் குத்தம்பாக்கத்தில் இருந்தே எடுக்கப்பட்டது. அந்த மண்ணைக்
கொண்டே செங்கலும் உற்பத்தி செய்யப்பட்டது. சமூக சேவை மையம் ஒன்று அமைக்கப்பட்டது. இன்று
இந்த மையத்தில் தொழில் தொடங்கப் பயிற்சிகளும், கிராம
வர்த்தகங்களும் நடைபெற்று வருகின்றன. 88 லட்ச ரூபாய் செலவில் இந்த பிரம்மாண்டமான
திட்டம் மிகச்சிறப்பாக செய்து முடிக்கப்பட்டது. மகிழ்ச்சியான விஷயம் இதில்
என்னவென்றால் இந்தத் தொகையில் நான்கில் ஒருபங்கு கிராம மக்களுக்கு ஊதியமாக வழங்க
பயன்பட்டது.
சாதரணமாக, சாதிக் கலவரங்களும்,
சண்டையும் பூசலுமாக இருந்த குத்தம்பாக்கத்தில் இப்போது சமத்துவபுரமும், தன்னிறைவுடன்
வாழும் மக்களும் நிறைந்திருப்பது தன்னாட்சியின் பெருமையைப் பறை சாற்றுகிறது என்று
சொல்லலாம், இல்லையா?
மேலும் பார்ப்போம்....