கிராம நலத்திட்டங்கள் அந்தந்த கிராம
சபைகளின் ஒப்புதலுடன் போடப்படுவதால் கிராம மக்களுக்கு அவற்றை சிறப்பான முறையில்
நிறைவேற்றிக் கொள்ளும் பொறுப்பும் தன்னடையே ஏற்பட்டு விடுகிறது.
அர்விந்த் கெஜ்ரிவால்
கிராம சபைகள் இப்போது இயங்கிவரும் பஞ்சாயத்து ராஜ்களிலிருந்து
முற்றிலும் மாறுபட்டது என்று நம் தலைவர் சொல்லுகிறார் என்று சென்ற அத்தியாயங்களில்
பார்த்தோம். கிராம சபைகளுக்கு என்னென்ன அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும், அதன்
மூலம் அவை எப்படி தங்களின் கிராமத்தை சீர் படுத்தலாம் என்று தனது புத்தகத்தில் பல யோசனைகளை
முன் வைக்கிறார் திரு அரவிந்த் கெஜ்ரிவால். ஒவ்வொன்றாகப் பார்ப்போம்:
- தங்களது சுயதேவைகளைப் பூர்த்தி செய்துகொள்வதுடன், பிரச்னைகளுக்கும் வழி காண வேண்டியது கிராம சபைகளின் பணி. சட்டங்கள் இதற்கு சாதகமாக இருக்கும் வகையில் திருத்தப்பட வேண்டும்.
- கிராமத்தில் இருக்கும் ஆசிரியர்கள், மருத்துவர்கள் காவல்துறை அதிகாரிகள் நுகர்பொருள் கடைக்காரர் உட்பட அவர்களது செயல் சரியில்லை என்றால் அவர்களை நீக்கவோ, அல்லது ஊதியத்தை நிறுத்தி வைக்கவோ கிராம சபைகளுக்கு அதிகாரம் வழங்க வேண்டும். இப்படிச் செய்வதன் மூலம் அரசு ஊழியர்கள் பொதுமக்களின் நேரடிக் கட்டுபாட்டில் வருவார்கள்.
- கிராமப் பள்ளிக்கூட ஆசிரியர்களை கிராம சபைகள் தேர்ந்தெடுக்கவேண்டும். பல கிராமப்பள்ளிகளில் ஒரே ஒரு ஆசிரியர் இருப்பார். அவரும் மழை, வெயில் என்று சொல்லி வராமலே இருந்துவிடுவார். இதனால் படிக்க ஆர்வம் இருக்கும் குழந்தைகளின் எதிர்காலம் அல்லவா வீணாகிறது?
- தங்கள் கிராமத்திலிருக்கும் படித்தவர்களை பள்ளிக்கூட ஆசிரியர்களாக கிராம சபைகள் தேர்ந்தெடுக்க வேண்டும். நகர்ப்புறங்களிலிருந்து வரும் ஆசிரியர் என்றால் அவருக்கு அதிகச் சம்பளம் கொடுக்க வேண்டியிருக்கும். கிராமத்திலிருந்து ஆசிரியர் வந்தால் அவருக்கு அத்தனை அதிக சம்பளம் கொடுக்க வேண்டியிருக்காது. அவரும் நம் கிராமத்து சிறுவர்கள் என்ற அக்கறையுடன் நிறைவாகப் பாடம் நடுத்துவார். அத்துடன் கிராமத்திலேயே படித்தவர்களுக்கு வேலை என்பது கிராம மக்களிடையே ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தும். நிறைவாகப் பாடம் நடத்துவார்.
- ஆலோசனைக் கூட்டங்களுக்கு அந்தந்த துறை சம்மந்தப்பட்ட அரசு அதிகாரிகளை வரவழைக்கும் அதிகாரம் வேண்டும். இதனால் குறைகள் உடனுக்குடன் களையப்படும்.
- தங்கள் கிராமம் தொடர்பான எந்தவொரு தகவலாக (RTI) இருந்தாலும் அறியும் அதிகாரம் கிராம சபைகளுக்கு வேண்டும்.
- கிராமத்திற்குப் போடப்படும் திட்டங்கள் கிராம சபையின் ஒப்புதலுடன் போடப்பட வேண்டும்.
- கிராம வளர்ச்சிக்காக மத்திய, மாநில அரசுகள் ஒதுக்கும் நிதி எந்தப் பெரிய திட்டத்துடனும் இணைக்கப்படாமல் பொதுவான நிதியாக இருக்கவேண்டும். பாசனத்துக்கு, கல்விக்கு, சுகாதாரத்திற்கு என்று கிராமசபைகள் பிரித்து எடுத்து செலவு செய்துகொள்ள வசதியாக நிதி ஒதுக்க வேண்டும்.
- வறுமைக்கோடு, அதை நிர்ணயிப்பது, யார் யார் அதன் கீழ் வரவேண்டும் என்பதை கிராம மக்கள் கூடி தீர்மானிப்பார்கள்.
- மக்களின் அடிப்படைத் தேவைகளை எல்லோருக்கும் கிடைக்க வழி செய்வது இந்த சபைகளின் முதல் வேலையாக இருக்க வேண்டும்.
- யாருக்கு வீடு வேண்டும் என்று கிராம சபை தீர்மானிக்கட்டும். பசியால் வாடும் குடும்பங்களுக்கு கொஞ்சகாலத்திற்கு கிராம சபை ரேஷன் பொருட்களை கொடுத்து உதவ வேண்டும்.
- வியாபாரம் செய்ய விரும்புபவர்களுக்கும், கடை வைத்து வியாபாரம் செய்ய விரும்புபவர்களுக்கும், விவசாயிகளுக்கும் கிராம சபைகள் குறைந்த வட்டிக்குக் கடன் கொடுத்து உதவலாம்.
- அறுவடைக்குப் பின் தானியங்களை சேர்த்து வைக்க சேமிப்புக் கிடங்குகள் கட்டித் தர வேண்டும்.
பொதுவான நிதியாக இருந்தால் கிராம சபை அந்த நிதியைத் தவறாகப்
பயன்படுத்துவார்கள் என்று ஒரு பயம் இருக்கிறது. தங்களுக்குள் அந்தப் பணத்தைப்
பிரித்து எடுத்துக் கொண்டு விடுவார்கள் என்று சொல்லுகிறார்கள். கிராம மக்கள்
இப்படிச் செய்ய மாட்டார்கள் என்று அடித்துச் சொல்லுகிறார் ஏ.கெ. ஏனெனில் தங்களது
கிராமத்தின் முன்னேற்றத்திற்கான நிதி அது என்பதை அவர்கள் உணர்ந்திருக்கிறார்கள்
என்கிறார். எந்த அப்பாவாவது தங்கள் குழந்தைகளுக்கு பள்ளிக்கூடம் வேண்டாம் என்று
சொல்லுவாரா? தங்களது உடல்நலத்திற்காக அமைக்கப்படும் மருத்துவமனை வேண்டாம் என்று
சொல்லுவாரா? தனக்கும், தன் குடும்பத்திற்கு நிரந்தர வருமானம் வேண்டுமென்று
ஆசைப்படுவார்களே தவிர சிலகாலத்திற்கு மட்டும் கிடைக்கும் பணத்தை ஏற்க விரும்ப
மாட்டார்கள்.
கிராம நலத்திட்டங்கள் அந்தந்த கிராம சபைகளின் ஒப்புதலுடன்
போடப்படுவதால் கிராம மக்களுக்கு அவற்றை சிறப்பான முறையில் நிறைவேற்றிக் கொள்ளும்
பொறுப்பும் தன்னடையே ஏற்பட்டு விடுகிறது, இல்லையா? தங்களது முன்னேற்றம் முக்கியம்
என்பதுடன் தங்களது சந்ததிகளுக்கும் இந்தத் திட்டங்கள் பயன்படும் என்ற நோக்கம்
புரிந்திருப்பதால் கிராம மக்கள் நல்ல முறையிலேயே இந்த நிதியை பயன்படுத்த விரும்புவார்கள்.
கிராம சபைகளும், கிராம மக்களும் தங்கள் பொறுப்பை உணர்ந்து
விழிப்புணர்வுடன் செயல்பட்டால் கிராமத்தின் நீர், நிலம், அங்கு கிடைக்கும் கனிம
வளங்கள், இயற்கை வளங்கள் ஆகியவற்றை அவர்களது ஒப்புதல் இல்லாமல் அரசு பறிக்க
முடியாது. இது எத்தனை பெரிய விஷயம்! குத்தம்பாக்கத்தில் நடந்தது போல யாரும் நம்
முற்றத்தில் வந்து குப்பைகளைப் போடுவது என்பது கனவிலும் நடக்காது.
கிராம சபை மூலம் கிராம மக்களுக்கு அதிகாரம் வழங்கப்படுவதால் என்ன பலன்?
கேரளாவில் ஒரு கிராமத்தில் ஏதாவது தொழிற்சாலை அமைக்க வேண்டும் என்றால்
கிராம சபையின் அனுமதி வேண்டும். ஒரு வெளிநாட்டு நிறுவனம் மரத்தொழிற்சாலை அமைக்க
ஒரு கிராமத்தைத் தேர்ந்தெடுத்தது. இந்த தொழிற்சாலைக்காக தொடர்ச்சியாக நிறைய
மரங்கள் வெட்டப்பட வேண்டும்.மக்களுக்கு இதில் சம்மதம் இல்லை. அந்தப் பன்னாட்டு
நிறுவனம் எப்படியோ கேரளா மாநில அமைச்சரிடமும், மாவட்ட ஆட்சியாளரிடமும் அனுமதி
பெற்றுவிட்டது. இவர்கள் கொடுத்த அழுத்தத்தினால் பஞ்சாயத்துத் தலைவரும் வேறு
வழியின்றி விட்டுக் கொடுக்க சம்மதித்துவிட்டார். விஷயம் கிராம சபைக்கு வந்தபோது
அவர்கள் உறுதியாக மறுத்துவிட்டனர்.
அரசாங்கத்தையும், அரசு உயர் அதிகாரிகளையும் லஞ்சம் கொடுத்து
வாங்கிவிடலாம். ஆனால் மக்களை அப்படி வாங்கமுடியாது. நம் ஆம்ஆத்மி கட்சியும், நம்
தலைவரும் பேசிவரும், மக்களுக்கு அதிகாரம் வழங்கும் தன்னாட்சியின் அருமை இப்போது
புரிகிறதா?
மக்கள் முடிவெடுக்கும் போது ஏற்படும் நன்மைகள் என்ன?