ஒரு பஞ்சாயத்துத் தலைவர் நல்லவராக
இருந்தால் மட்டும் போதாது. மக்களுக்குத் தேவையானவற்றைச் செய்ய அவர்களைக் கலந்து
ஆலோசிப்பவராகவும் இருக்க வேண்டும். – அர்விந்த் கெஜ்ரிவால்
திருவிளையாடல் படத்தில் ஒரு வசனம் வரும்: ‘குற்றம் சொல்லியே பெயர்
வாங்கிடுவீங்க’ என்று. ஒரு சிலர் மட்டுமே குற்றங்களைச் சுட்டிக் காட்டுவதுடன்
நிற்காமல் குற்றங்களைக் களைவது எப்படி என்றும் உருப்படியான யோசனைகளைக்
கூறுவார்கள். நம் தலைவர் அந்த வகையில் முதலிடத்தைப் பிடிக்கிறார். தனது தன்னாட்சி
புத்தகத்தில் நமது குடியரசு முறை, பஞ்சாயத்து ராஜ் இவற்றின் மீது குற்றம்
சொன்னாலும், அக்குற்றங்களை நீக்கவும் வழிமுறைகளை எடுத்துரைக்கிறார்.
அதுமட்டுமின்றி தன்னாட்சி என்ற பெயரில் மக்களுக்கு அதிகாரம் தந்தால்
என்னவாகும் என்ற பயமும் தேவையற்றது என்கிறார். தன்னாட்சி என்ற பெயரில் கிராம
சபைகளுக்கு அதிக அதிகாரம் கொடுப்பதைப் பற்றிய தவறான புரிதல்களுக்கும் விடை
அளிக்கிறார் திரு அரவிந்த் கெஜ்ரிவால்
தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிரான கொடுமைகள் அதிகமாகுமா?
ஆகாது. உண்மையில் கிராம சபையில் அவர்கள் எல்லோரும் சேர்ந்து வந்து
தங்கள் தரப்பு வாதத்தை வைக்கலாம். கிராம சபை அவர்களுக்கு ஆதரவாக இருக்கும். அதுவுமின்றி
தன்னாட்சியில் லோக்பால் சட்டம் அமலில் இருக்கும். தலித்துகள் கிராம சபைக்
கூட்டத்திற்கு வரக்கூடாது என்று தடுக்கப்பட்டாலோ, அவர்களது குறைகள்
கவனிக்கப்படாமல் இருந்தாலோ லோக்பாலில் புகார் செய்யலாம்.
இன்னொன்று: மேல்சாதியில் பலருக்கு தலித்துகளின் மேல் இரக்கம் உண்டு.
தலித்துகளுக்கு உதவ வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள்தான் இந்த மேல்சாதியினர்.
இப்போதைய அமைப்பு மேல்சாதியினருக்கு ஆதரவாக இல்லை. இருக்குமானால் அவர்களும்
இணைந்து தலித்துகளுக்காகக் குரல் கொடுப்பார்கள்.
அதிகார துஷ்பிரயோகம் தன்னாட்சியில் தடுக்கப்படும்.பஞ்சாயத்துத்
தலைவர்களிடம் அதிகாரம் இருப்பதைக் காட்டிலும் கிராம சபைகளிடம் அதிகாரம் இருந்தால்
நிலைமை சீராக இருக்கும்.
கிராம சபை கட்டப்பஞ்சாயத்து ஆகிவிடாதா?
சில பஞ்சாயத்துகள் சட்டத்தைத் தங்கள் கையில் எடுத்துக் கொண்டு மரண
தண்டனை கூடக் கொடுக்கிறார்கள் என்ற புகார் இருக்கிறது. கட்டப் பஞ்சாயத்து
உருவாகும் என்று அச்சம் தெரிவிக்கிறார்கள். கிராம சபைகளும் தங்கள் அதிகாரத்தை
துஷ்பிரயோகம் செய்து தவறான முடிவுகளை எடுக்க மாட்டார்களா?
கிராம சபைகளுக்கு அத்தனை அதிகாரம் எப்போதுமே தரப்படமாட்டாது. இந்திய
அரசாங்கத்தில் சட்டதிட்டங்களுக்கு உட்பட்ட அதிகாரங்கள் மட்டுமே அவைகளுக்குக்
கொடுக்கப்படும்.
வரதட்சிணை, பால்ய விவாகம் போன்ற சமூக அவலங்கள் அதிகரிக்குமா?
சட்ட விரோதமான செயல்களை கிராம சபை அங்கீகரிக்காது. அவை கிராமங்களில்
நடைபெறுவதையும் பார்த்துக் கொண்டு இருக்காது. இந்த மாதிரி செயல்களில் கிராமசபை
ஈடுபட்டால் அந்த சபையும் சமூக விரோத அமைப்பு என்று முத்திரை குத்தப்படும். எந்த
ஒரு கிராம சபையும் தங்களுக்கு கெட்ட பெயர் வருவதை விரும்புவதில்லை.
கிராம சபைகளுக்கு அதிக அதிகாரம் வழங்கும்போது கோஷ்டி பூசல், வீண்
விவாதங்கள், தகராறு எழ வாய்ப்புகள் அதிகம் ஆகுமே?
கிராம மக்கள் கல்வியறிவு இல்லாதவர்கள்; அவர்களால் முடிவுகள் எடுக்க
முடியாது. அப்படி ஒரு விஷயத்தில் முடிவு எடுக்க முயலும்போது வீண் தகராறுகளும்,
விவாதங்களும் ஏற்பட வாய்ப்புண்டு என்று சிலர் அச்சப்படுகிறார்கள். இதைப் போல நடக்கவும் வாய்ப்பு
உண்டு என்றாலும் ஒரு திறமை மிக்க தலைவனால் இந்த நிலைமையை மாற்ற முடியும் என்பதற்கு
திரு அரவிந்த் கெஜ்ரிவால். ஒரு உதாரணத்தைக் காட்டுகிறார்.
மகாராஷ்ட்ராவில் ஹிவ்ரே பஸார் என்று ஒரு இடம். பூனாவிலிருந்து
100 கி.மீ. தூரத்தில் இருக்கிறது. பல வருடங்கள் வறட்சியால் வாடிய இடம் இது. 90%
மக்கள் வறுமைக்கோட்டிற்குக் கீழே. மக்களுக்குப் படிப்பறிவு இல்லை. ஏழைகள் வேறு.
ஒவ்வொரு வீட்டிலேயும் சாராயம் காய்ச்சிக் குடிக்க ஆரம்பித்தனர். ஏகப்பட்ட
குற்றங்கள் நடக்க ஆரம்பித்தது. ஒவ்வொரு வாரமும் போலீஸ் வந்து போய்க்கொண்டிருந்தது.
அந்த ஊரில் இருந்த இளைஞர்கள் சிலர் சேர்ந்து தங்களுக்குள் ஒருவரைத் தேர்ந்தெடுத்து
பஞ்சாயத்து தலைவர் ஆக்கி, கிராமத்தைத் திருத்தலாம் என்று முடிவு செய்தனர்.
போப்பட்ராவ் பவார் என்கிற மும்பையில் படித்துக் கொண்டிருந்த இளைஞர் அவர். தனித்தனிக்
குழுக்களாக கிராமம் முழுவதும் பிரிந்திருந்தது. அவர்களை சந்தித்து இந்த இளைஞரை
தலைவர் ஆக்கும்படி கேட்டுக்கொண்டபோது எல்லோரும் சிரித்தனர். எங்களை யாராலும்
திருத்த முடியாது என்றனர். கடைசியில் ஒரு வருடத்துக்கு தலைவராக இருந்துவிட்டுப்
போகட்டும் என்று அவரை ஒப்புக்கொண்டனர்.
மாதத்திற்கு நான்குமுறை கிராம மக்கள் அனைவரையும் கூட்டி ஆலோசனைக்
கேட்டார். பிரச்னை வந்தபோதெல்லாம் மொத்த கிராம மக்களை ஒன்று கூட்டி விவாதித்தார்.
ஒருவருடத்தில் தலைவர் நம் முன்னேற்றத்திற்காகப் பாடுபடுகிறார் என்று எல்லோருக்கும்
புரிந்தது. இப்போது அந்த கிராமத்தில் நல்ல சாலைகள் இருக்கின்றன. சேரியில் வாழ்ந்து
கொண்டிருந்த எல்லோருக்கும் இப்போது வீடு இருக்கிறது. கிராமச் சிறுவர்கள் படிக்க
நல்ல பள்ளிக்கூடமும் மக்களின் சுகாதாரத்தைக் கவனிக்க நல்ல மருத்துவமனையும்
இருக்கிறது. இப்போது யாரும் குடிப்பதில்லை. சாராயம் காயச்சப்படுவதில்லை. ஒரு
போலீஸ் கேஸ் கூடக் கிடையாது!
இந்த இடத்தில் இன்னொரு விஷயத்தையும் குறிப்பிட வேண்டும். போப்பட்ராவ்
எந்த ஒரு விஷயத்திற்கும் அரசாங்கத்தைக் கேட்கவில்லை. பள்ளிக்கூடம் நடத்த தங்கள்
வீடுகளிலிருந்த அறைகளைக் கொடுத்தனர் அந்த கிராம மக்கள். அவர்களாகவே மரங்கள்
நட்டார்கள். மழைநீர் சேமிப்பு செய்தார்கள். விளைவு? ஒரு போகம் கூட விளையாத அந்தக்
கிராமத்தில் முப்போகம் விளைந்தது.
ஹிவ்ரே பஸார் முன்னேற போப்பட்ராவ் என்கிற நல்ல பஞ்சாயத்துத் தலைவர் காரணம்
என்கிறார்கள். உண்மை. நல்ல பஞ்சாயத்துத் தலைவர் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு
பவார் ஒரு உதாரணம் தான். ஆனால் ஒரு பஞ்சாயத்துத் தலைவர் நல்லவராக இருந்தால்
மட்டும் போதாது. மக்களுக்குத் தேவையானவற்றைச் செய்ய அவர்களைக் கலந்து
ஆலோசிப்பவராகவும் இருக்க வேண்டும் என்பதற்கு அவர் ஒரு நல்ல உதாரணம். நல்ல
தலைவரும், அவருக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்கும் மக்களும் இருந்தால் அந்த கிராமம்
எப்படி வளம் கொழிக்கும் என்பதற்கு ஹிவ்ரே பஸார் மக்களும், போப்பட்ராவ் பவாரும்
நல்ல உதாரணங்கள்.
தன்னாட்சி பற்றி மேலும் பார்ப்போம்.