0 தன்னாட்சி (18) கிராம சபையில் மாற்றங்கள்

மக்கள் கிராம சபைகள் மூலம் முடிவுகள் எடுக்கும் விதமாக சட்டம் திருத்தப்பட வேண்டும். இதனால், தங்கள் முன்னேற்றத்திற்கு தாங்களே பொறுப்பு என்ற மனப்பான்மை மக்களுக்கு வரும் - அர்விந்த் கெஜ்ரிவால்

போன பதிவுகளில் தன்னாட்சி பற்றி பலவிதமான விஷயங்கள் படித்தோம். நமது அரசியல் அமைப்பு திருத்தப்பட்டால் ஒழிய, நல்ல மனிதர்களால் கூட நம் நாட்டில் முன்னேற்றத்தைக் கொண்டு வர முடியாது என்றும் பார்த்தோம். அரசியல் அமைப்பில் என்னென்ன மாற்றங்களைக் கொண்டு வர வேண்டும் என்று நம் தலைவர் திரு அரவிந்த் கெஜ்ரிவால் தனது புத்தகம் ‘தன்னாட்சி’ யில் சொல்லியிருப்பதைப் பார்ப்போம்.

முதலில் மக்கள் கிராம சபைகள் மூலம் முடிவுகள் எடுக்கும் விதமாக சட்டம் திருத்தப்பட வேண்டும். இதனால், தங்கள் முன்னேற்றத்திற்கு தாங்களே பொறுப்பு என்ற மனப்பான்மை மக்களுக்கு வரும். நம் தலைவர் திரு அரவிந்த் கெஜ்ரிவால் பரிந்துரைக்கும் இன்னும் சில மாற்றங்களை பார்போம்.

கிராம சபையின் அதிகார வரம்பு:
தற்போதைய நிலை: பஞ்சாயத்துக்களுக்கு மிகவும் குறைந்த அதிகாரங்கள் இருக்கிறது. அதுவும் பஞ்சாயத்துத் தலைவரின் கட்டுப்பாட்டில் உள்ளது. அவரை யாரும் தட்டிக் கேட்க முடியாது. கிராம சபை அவருக்கு ஆலோசனை சொல்லலாம். அவ்வளவே. அதைக் கேட்பது, விடுவது அவரது விருப்பம். இதனால் பெரும்பாலான பஞ்சாயத்துத் தலைவர்கள் ஊழல்வாதியாக மாறிவிட்டனர். அவர்களது நடவடிக்கைகளைப் பார்த்து ஒன்றும் செய்யமுடியாமல் நமக்கு ஏன் வம்பு என்று மக்கள் ஒதுங்கிவிடுகிறார்கள். மாவட்டக் குற்றவியல் நடுவர் அல்லது மாவட்ட ஆட்சியாளர் இவர்களால் மட்டுமே பஞ்சாயத்துத் தலைவரை கட்டுப்படுத்த முடியும் என்ற நிலை.

திரு அரவிந்த் கெஜ்ரிவால் யின் யோசனை:
·         பஞ்சாயத்துத் தலைவரை நேரிடையாக மக்களின் கட்டுப்பாட்டில் கொண்டுவர வேண்டும். முதல் கட்டமாக கிராம சபை எல்லா முடிவுகளையும் எடுக்கும் என்ற நிலையைக் கொண்டுவர வேண்டும். அந்த முடிவுகள் இறுதியானாவை. அவற்றைச் செயல்படுத்தும் பொறுப்பு மட்டுமே பஞ்சாயத்துத் தலைவர்களுக்கு இருக்க வேண்டும்.
·         அவர் தவறாக நடந்து கொண்டால், அவருக்கு எதிராக காவல் துறையை வழக்குப் பதிவு செய்யும் வைக்கும் அதிகாரம்  கிராம சபைகளிடம் இருக்க வேண்டும். விசாரணை எந்த நிலையில் இருக்கிறது என்ற அறிக்கை வாராவாரம் அல்லது மாதந்தோறும் கிராம சபைமுன் வைக்கப்பட வேண்டும்.

·         விசாரணை முடியும் வரை அவர் மீது மாவட்டக் குற்றவியல் நடுவர் அல்லது வேறு அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுக்கக்கூடாது.
·         கிராம சபையின் வழிகாட்டுதல் படி நடக்கவில்லை என்றால் அவரை திரும்ப அழைத்துக் கொள்ளும் அதிகாரம் கிராம சபைக்கு இருக்க வேண்டும். எப்படி அவரைத் திரும்ப அழைத்துக் கொள்வது? முதலில் ஐம்பது சதவிகிதத்திற்கு அதிகமான வாக்காளர்கள் தேர்தல் ஆணையத்திடம் கையெழுத்திட்டு ஒரு மனு கொடுக்க வேண்டும். 15 நாட்களுக்குள் கையெழுத்துக்கள் சரிபார்க்கப்பட்டு ஒரு மாதத்துக்குள் அவர்மீது நடவடிக்கை எடுக்க ரகசிய வாக்கெடுப்பு நடத்தி, நம்பிக்கையில்லாத் தீர்மானம் வெற்றி பெற்றால், அவர் நீக்கப்படுவார். மறுதேர்தல் நடத்தப்படும்.

·         இந்த அதிகாரம் கிராம சபைகளுக்கு வழங்கப்பட்டால், மக்கள் பஞ்சாயத்துத் தலைவரின் நடவடிக்கைகளைத் தொடர்ந்து  கண்காணிக்க முடியும். மக்கள் நம்மைக் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள் என்ற உண்மை தலைவர்களை தவறு செய்யாமல் காக்கும்.

கிராமத்தின் வேலைகளை பகிர்ந்தளித்தல் 

தற்போதைய நிலை: எந்த வேலை, எந்த வசதிகள் எந்த அமைப்பின் கீழ் வரும் என்பதைப் பற்றிய குழப்பங்கள் இருக்கின்றன.
யோசனை: முதலில் செய்ய வேண்டிய வேலைகள், தேவையான வசதிகள், இவைகளை எந்த அமைப்பின் கட்டுப்பாட்டில் விடுவது என்று தெளிவான ஒரு பட்டியல் தயார் செய்ய வேண்டும். இதன் பிறகு, நிதி ஒதுக்கீடு பற்றி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முடிவு எடுக்க வேண்டும்.


தற்போதைய நிலை:
தங்கள் கிராமத்தில் வேலை செய்யும் அரசு ஊழியர்களின் செயல் திறன் மக்களுக்கு அதிருப்தியை கொடுக்கிறது. கிராம சபைகளின் கீழ் அவர்கள் வராததால் மக்கள் என்ன செய்வது என்று தெரியாமல் இருக்கிறார்கள்.

யோசனை:
·         எந்த பஞ்சாயத்தின் கீழ் வேலை செய்கிறார்களோ அந்த பஞ்சாயத்தின் ஊழியர்களாக அவர்கள் கருதப்பட வேண்டும். ஒருவர் ஓய்வு பெற்றால் அந்த இடத்திற்கு இன்னொருவரை நியமிக்கும் அதிகாரமும் பஞ்சாயத்துக்கு இருக்க வேண்டும். மாநில அரசின் தலையீடு இதில் இருக்ககூடாது.
·         தேவைப்பட்டால் புது ஊழியர்களை நியமிக்கும் அதிகாரம் பஞ்சாயத்துகளிடம் இருக்க வேண்டும்.
·         அவர்களை தண்டிக்கவும், நீக்கவும், நன்கு வேலை செய்பவர்களை ஊக்குவிக்கவும் கிராம சபைகளுக்கு அதிகாரம் வேண்டும்.
·         நியாய விலைக்கடைகளுக்கு வழங்கப்படும் உரிமத்தை அவர்கள் சரிவர இயங்கவில்லை என்றால் ரத்து செய்யும் அதிகாரம் கிராம சபைக்கு வேண்டும்.

·         தங்கள் பகுதியைச் சேர்ந்த ஊழியருக்கு ஆணையிடும் அதிகாரமும், தேவைப்படும்போது அவர்களை கிராம சபை முன் ஆஜராகும்படி உத்திரவிடவும் கிராம சபைக்கு அதிகாரம் இருக்கவேண்டும். கிராம சபையின் ஆணைகளை அலட்சியப்படுத்தவோ, நிராகரிக்கவோ செய்யும் அதிகாரிக்கு அபராதம் விதிக்கும் அதிகாரமும் கிராம சபைக்கு வேண்டும். அதிகாரிகளது அதிகார வரம்பில் குளறுபடிகள் இருந்தால் அடுத்த உயர்மட்டப் பஞ்சாயத்திடம் தீர்வு கோரவேண்டும்.

அரசாங்க நிதியை கிராம சபையின் கட்டுப்பாட்டில் வைத்தல்:

தற்போதைய நிலை: கிராமத்தின் தேவைகளுக்குச் சற்றும் தொடர்பு இல்லாத திட்டங்களை மத்திய, மாநில அரசுகள் இயற்றுகின்றன. இது போன்ற திட்டங்கள் ஊழலுக்கு வழி வகுப்பதுடன், மக்களையும் பிச்சைக்காரர்கள் ஆக்குகின்றன.
யோசனை:
·         தேவையில்லாத திட்டங்கள் யாவும் நிறுத்தப்பட வேண்டும்.  பஞ்சாயத்துக்கு வழங்கப்படும் நிதி எந்தத் திட்டத்துடனும் இணைக்கப் படாததாக இருக்க வேண்டும். அப்படி ஒதுக்கப்பட்ட நிதியை எந்தெந்த திட்டத்திற்கு செலவு செய்ய வேண்டும் என்பதை கிராம மக்கள் தீர்மானிக்கட்டும்.
·         ஒவ்வொரு மாநிலமும் தங்கள் பட்ஜெட்டில் 50% பஞ்சாயத்துக்களுக்கு வழங்க வேண்டும்.
·         மேலதிகாரியிடமிருந்து தங்கள் கிராமத்திற்கான நிதியைப்  பெற பஞ்சாயத்துகள் மிகுந்த சிரமப் பட வேண்டியிருக்கிறது. ஒவ்வொரு வருடமும் ஏப்ரல் முதல் தேதி பஞ்சாயத்துக்களுக்கான நிதியை அவர்களது வங்கிக் கணக்கில் போட்டு விடப்பட வேண்டும்.
·         ஒவ்வொரு கிராமத்திலிருந்து தலித்துகளுக்கென நிதியின் ஒரு பகுதி ஒதுக்கப்பட வேண்டும். மேல்சாதியினரால் அவர்கள் கொடுமைக்கு ஆளாகாமல் இருக்க இது உதவும்.

அடுத்த பதிவில் மேலும் பார்ப்போம்.......