இப்போது இருக்கும் பஞ்சாயத்து ராஜ்
என்பவை அரசின் கைக்கூலி போல செயல்படுகின்றன. அவற்றிற்கு அதிகாரமும் இல்லை. அவை
மக்களுக்கு அதிகாரம் வழங்கும் நிலையிலும் இல்லை. மாறாக, அரசியல்வாதிகளும்,
அரசு அதிகாரிகளும் பணம் சம்பாதிக்க வழிவகை செய்யும் அமைப்புகளாக
இருக்கின்றன. அர்விந்த் கெஜ்ரிவால்
தன்னாட்சி வேண்டும் என்று சொல்லுகிறோம். மக்கள் முடிவுகளை எடுக்க
வேண்டும் என்கிறோம். இதெல்லாம் நடக்கக்கூடிய காரியமா? நூறு கோடிப் பேர் எப்படி ஒரு
விஷயத்தைக் குறித்து முடிவு எடுக்க முடியும்? இந்தத் தொடர் படிக்கும் பலருக்கும்
இதுபோன்ற கேள்விகள் மனதில் எழுந்து கொண்டே இருக்கும். அதற்கும் நம் தலைவரிடம் பதில்
இருக்கிறது.
ஒரு விஷயத்தை நாம் நன்றாக நினைவில் கொள்ள வேண்டும். ஐந்தாண்டுகளுக்கு
ஒருமுறை நம்மில் ஒருவரை வாக்கெடுப்பு மூலம் தேர்ந்தெடுத்து நம் சார்பில் முடிவுகள்
எடுக்கும்படி பதவியில் உட்கார வைக்கிறோம். அவர் என்ன செய்கிறார்? நமது
வாக்குகளினால் பெற்ற எல்லையற்ற அதிகாரத்தைப் பயன்படுத்தி ஊழல் செய்து நம்மை
இருட்டில் தள்ளுகிறார்.
இந்த நிலை மாற வேண்டுமென்றால் நமக்குத் தன்னாட்சி வேண்டும். இதைத்தான்
நம் தலைவரும், ஆம்ஆத்மி கட்சியும் வலியுறுத்துகிறது. மக்கள் எடுக்கும் முடிவுகளை
அரசியல்வாதிகள் செயல்படுத்த வேண்டும். அப்படிச் செய்யாத அரசியல்வாதிகளை பதவி
நீக்கம் செய்யும் அதிகாரமும் மக்களுக்கு வேண்டும். இப்படிச் சொன்னால்
எல்லோருக்கும் வியப்பு ஏற்படுகிறது. நீக்கும் அதிகாரமா? நமக்குக் கிடைக்குமா என்று
ஆச்சரியப்படுகிறார்கள்.
இந்த வியப்பைப் போக்கவே இந்தக் கட்டுரைகளில் திரும்பத் திரும்ப பல
விஷயங்கள் சொல்லப்படுகின்றன. இதில் சொல்லப்படும் விஷயங்கள் எல்லாமே நம் தலைவர்
இந்தியா முழுவதும் சுற்றுப்பயணம் செய்து நேரில் கண்டதையும், கேட்டதையும்
அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டவை.
சரி இப்போது நாம் நம் தொடரை விட்ட இடத்திலிருந்து தொடருவோம்.
சென்ற பகுதியில் ஏற்கனவே இந்திய கிராமங்களில் இருந்த கிராம சபைகள்
கலைக்கப்பட்டு அவைகளின் அதிகாரமும் பறிக்கப்பட்டன என்று பார்த்தோம். சுதந்திரம்
கிடைத்ததே தவிர, இந்த கிராம சபைகளின் அதிகாரம் திருப்பித் தரப்படவில்லை. இப்போது
இருக்கும் பஞ்சாயத்து ராஜ் என்பவை அரசின் கைக்கூலி போல செயல்படுகின்றன. அவற்றிற்கு
அதிகாரமும் இல்லை. அவை மக்களுக்கு அதிகாரம் வழங்கும் நிலையிலும் இல்லை. மாறாக,
அரசியல்வாதிகளும், அரசு அதிகாரிகளும் பணம் சம்பாதிக்க வழிவகை செய்யும் அமைப்புகளாக
இருக்கின்றன. மத்திய, ஆனில அரசின் திட்டங்களை செயல்படுத்தும் ஒரு அமைப்பே இந்த
பஞ்சாயத்து ராஜ்கள். நிர்வாகத்தில் பங்கெடுத்து தீர்மானங்கள் எடுக்கும் அதிகாரம் இவைகளுக்குக் கிடையாது.
பஞ்சாயத்து ராஜும் நம் தலைவர் கூறும் கிராம சபைகளும் ஒன்றல்ல; கிராம
சபை என்பது ஒட்டுமொத்த கிராமமும் ஒன்றிணைந்த பொதுசபை. பஞ்சாயத்து ராஜ் என்பது
தேர்ந்தெடுக்கப்பட்ட அல்லது நியமிக்கப்பட்ட சிலரைக் கொண்டது. அந்த சிலரும்
மக்களின் நன்மைகளை மனதில் கொண்டு நடப்பதில்லை. மாவட்ட ஆட்சியாளருக்கு அரசு
அதிகாரிகளின் நெருக்கடி.
குத்தம்பாக்கத்தில் என்ன நடந்தது என்று பார்க்கலாம். பிறகு நிலைமை
தெளிவாகப் புரியும். சென்னை நகரின் குப்பைகளை கொட்ட ஒரு இடம் தேவைப்பட்டது. எங்கு
தேடுவது என்று பார்க்கையில், திருவள்ளுவர் மாவட்டத்தில் இருக்கும் குத்தம்பாக்கம்
அரசாங்கத்தின் கண்ணில் பட்டது. ஆடு, மாடுகள் மேய இந்தக் கிராமத்தில் சுமார் 100
ஏக்கர் நிலப்பரப்பில் பச்சைப்பசேல் என்று புல்வெளி இருந்தது. பார்த்தார் மாவட்ட
ஆட்சியாளர். மக்களிடம் சொல்லாமல் கொள்ளாமல் 70 ஏக்கர் நிலத்தை பறித்துக்கொண்டு
அதில் குப்பைகளைக் கொட்ட அனுமதி கொடுத்தார். கிராம மக்களுக்கு பயங்கர கோபம்
உண்டாயிற்று. குப்பை கொட்ட எங்கள் கிராமம் தான் கிடைத்ததா? நாங்கள் குப்பைகளுக்கு
நடுவில் வாழ வேண்டும் என்று எங்கள் தலையில் எழுதியிருக்கிறதா? உங்கள் பகுதியில் குப்பைகளைக்
கொட்டாமல் எங்கள் கிராமத்தில் வந்து கொட்டுகிறீர்களே, நாங்கள் மனிதர்கள் இல்லையா? என்றெல்லாம்
கேட்டு கொதித்துப் போய் நீதிமன்றத்தில் புகார் செய்தனர். ஆனால் ஒரு மாவட்ட
ஆட்சியாளருக்கு இதைச் செய்ய அதிகாரம் இருக்கிறது என்று சொல்லி கையை
விரித்துவிட்டது நீதிமன்றம்.
பணம் பாதாளம் வரை பாயும் என்று ஒரு பழமொழி நம் எல்லோருக்கும்
தெரியும். அரசு திட்டங்களுக்காக ஒதுக்கும் பணம் கீழ் வரை வருவதேயில்லை. ஒவ்வொரு
அதிகாரியும் மொத்தப் பணத்தையும் தாங்களே வைத்துக் கொண்டு செலவு செய்யவே
விரும்புகிறார்கள். எல்லா மாவட்டங்களிலும் ஆட்சியாளர்கள் தங்களுக்கு சரி என்று
பட்டதை செய்துகொண்டே போகிறார்கள். மக்களின் கருத்துக்களைக் கேட்டறிந்து இந்தப்
பணத்தை செலவு செய்ய வேண்டும். ஆனால் எந்த அதிகாரியும் மக்களைக் கேட்பதே இல்லை.
தங்கள் மூலம் பணம் போவதால் தங்கள் விருப்பப்படி செலவழிக்கிறார்கள். இவர்களது
ஆதிக்கப் போக்கை தட்டிக் கேட்க மக்களுக்கு அதிகாரம் இல்லை.
பஞ்சாயத்து செயலர்களும், கிராம அதிகாரிகளும் மாநில அரசால்
தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். கிராம மக்களால் தானே தங்களுக்கு நன்மை செய்யத் தகுதி
வாய்ந்த நபர்களைத் தேர்ந்தெடுக்க முடியும்? ஒவ்வொரு கிராமத்தின் தேவைகளும் அங்கு
பல்லாண்டுகளாக வாழும் மக்களுக்குத் தெரியுமா? அல்லது மாநில அரசுக்குத் தெரியுமா?
அரசால் நியமிக்கப்படும் பஞ்சாயத்து செயலர்கள் செயல் படுவது பஞ்சாயத்திற்கா? அல்லது
மாநில அரசிற்கா?
தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டம், பின்தங்கிய பகுதிகளுக்கான நிதி ஆகியவற்றிக்கு ஒதுக்கப்படும் நிதியை எந்தெந்த திட்டங்களுக்கு செலவிடுவது
என்று கிராம சபை தீர்மானிக்க வேண்டும் என்பது சட்டம். கிராம சபை முடிவு செய்யும்
திட்டங்களுக்குகாகவே இந்த நிதி என்று மிகத் தெளிவாக சொல்லுகிறது சட்டம். ஆனால்
இந்த திட்டம் செயல்படுத்தப்படும் கிராமங்களில் கிராம சபைகள் கூட்டப்படுவதேயில்லை.
மாவட்ட ஆட்சியாளரின் கணக்கில் இந்தப் பணம் போடப்பட்டு கிராம சபையின் ஒப்புதல்
இல்லாமலேயே இந்த நிதி செலவழிந்து கொண்டிருந்தது.
ஆம்ஆத்மி கட்சி சொல்வது இதுதான்: மாநில அரசுகள், மாவட்ட
ஆட்சியாளர்கள், பஞ்சாயத்துத் தலைவர்கள் இவர்களிடமிருந்து அதிகாரத்தை வாங்கி
மக்களிடம் கொடுக்க வேண்டும். அப்போதுதான் தன்னாட்சி மலரும்!
அடுத்த பகுதியில் சந்திப்போம்.