கிராம சபைகளுக்கு முன்பிருந்த அதிகாரம் திருப்பித் தரப்பட்டால் மட்டுமே இதனை நாம் சுயாட்சி என்று குறிப்பிட முடியும். அரவிந்த் கெஜ்ரிவால்
1860 ஆண்டு வரை கிராம மக்களுக்கு
நிர்வாகத்தில் நேரடியான, வலுவான பங்களிப்பு இருந்தது. நம்
நாட்டின் மீது படையெடுத்து வந்தவர்களும், நம் நாட்டை
கைப்பற்றியவர்களும் மத்திய அரசைத் தங்கள் கட்டுபாட்டில் வைத்துக் கொண்டார்களே தவிர,
கிராம சபைகள் எப்போதும்போல இயங்கி வந்தன. 1830 இல் அப்போதைய கவர்னர்
ஜெனெரல் மேட்கால்ஃப் ஆங்கில அரசுக்கு ஒரு கடிதம் எழுதினார். அதில் கிராம சபைகள்
பற்றியும், இந்த சபைகளில் மக்கள் ஒன்றுகூடி
திட்டங்கள் போடுவதையும், தீர்மானங்கள் போடுவதையும் எழுதி,
இப்படியே இவற்றை விட்டுவைத்தால் நமக்குத்தான் ஆபத்து என்றும்
எழுதினார்.
1860 ஆம் ஆண்டு கிராம சபைகளைக்
கலைக்கும் சட்டம் ஒன்றை இயற்றிய ஆங்கில அரசு, கிராமங்களை மாவட்ட ஆட்சியாளரின்
நேரடிப் பார்வையின் கீழ் கொண்டுவந்தது. பாசனம், கல்வி,
குடிநீர் என்று சர்வ சாதாரணமாக கிராம சபை நிர்வகித்து வந்த எல்லாவற்றிற்கும் தனித்தனி
துறைகள் என்று ஏற்படுத்தி, ஒவ்வொரு துறைக்கும் தனி அதிகாரியும்,
அவருக்கு உதவுவதற்கு உதவியாளர்களும் நியமிக்கப்பட்டார்கள்.
1947 ஆண்டு ஆங்கிலேயர்களிடமிருந்து
நாட்டை ஆளும் அதிகாரம் நமக்குக் கிடைத்தது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக கிராம
சபைகளிடமிருந்து பறிக்கப்பட்ட அதிகாரங்கள் அவைகளுக்குத் திருப்பித் தரப்படவில்லை.
வெள்ளைக்கார ஆட்சியருக்கு பதில் இந்திய ஆட்சியாளர். அவ்வளவுதான். நிர்வாக
அமைப்பில் எந்தவொரு மாற்றமும் இல்லை. கிராம சபைகளுக்கு முன்பிருந்த அதிகாரம் திருப்பித்
தரப்பட்டால் மட்டுமே இதனை நாம் சுயாட்சி என்று குறிப்பிட முடியும். இப்போது நாம்
அனுபவித்து வருவது குடியரசு என்ற பெயரில் ஒரு சிலரின் அதிகார ஆட்சி.
பஞ்சாயத்து ராஜ் முறை:
திரு அரவிந்த் கெஜ்ரிவால் தனது புத்தகத்தில்
எப்படிப்பட்ட ஆட்சி நமக்குத் தேவை என்று விளக்கமாகக் கூறுகிறார்:
‘தன்னாட்சி இல்லை என்று
சொல்லுகிறீர்கள்; மக்களுக்கு அதிகாரம் இல்லை என்கிறீர்கள். நீங்கள் சொல்லும்
தன்னாட்சி எந்தவகையில் சிறந்தது என்று சொல்லமுடியுமா? நீங்கள் கூறும் அமைப்பில்
என்ன புதிதாக இருக்கிறது? இப்போதும்
பஞ்சாயத்துகள் இருக்கின்றனவே’ என்று சிலர் என்னைக் கேட்கிறார்கள்.
பஞ்சாயத்துகள் மூலம் அரசின்
கொள்கைகளில் மக்களின் நேரடிப் பங்கு இருந்தால் எனக்கு மகிழ்ச்சியே. ஆங்கிலேயர் நம்
நாட்டிற்கு வருமுன் இப்படித்தான் இருந்தது. ஆனால் நாம் சுதந்திர நாடான பின் வந்த
பஞ்சாயத்துகள் மக்களுக்கு அதிகாரம் வழங்கும் நிலையில் இல்லை. அரசு
அதிகாரிகளுக்கும், அரசியல்வாதிகளுக்கும் பணம் சம்பாதிக்க வழி செய்து கொடுக்கும்
வகையில் அமைந்திருக்கிறது. மத்திய மாநில அரசுகள் இயற்றும் திட்டங்களை
செயல்படுத்தும் ஒரு ஏஜென்சியாகவே இந்த பஞ்சாயத்துகள் இருக்கின்றன என்பது மிகவும்
வருந்தத்தக்கது. அவைகளுக்கு நிர்வாகத்தில் பங்கு கொண்டு தீர்மானங்கள் எடுக்கும் அதிகாரம்
இல்லை. இன்னொரு விஷயம் என்னவென்றால் பஞ்சாயத்துகளில் மொத்த கிராமமும் ஒன்றுகூடி பிரச்னைகளைப்
பேசி விவாதித்து முடிவு எடுப்பதில்லை. அவர்களுக்கு சுவாரஸ்யம் போய்விட்டது. ஒருசிலர் மட்டுமே பஞ்சாயத்து
கூட்டங்களில் கலந்து கொள்ளுகிறார்கள்.
இவை தவிர, நம் பஞ்சாயத்துகளில் பல
பிரச்னைகள் இருக்கின்றன. சிலவற்றைப் பார்ப்போம்:
·
பஞ்சாயத்து ராஜ் அமைப்பின் அதிகாரம் மிகக் குறைவு. அவற்றால் அரசு
அதிகாரிகளைக் கட்டுப்படுத்தவோ, அரசு ஒதுக்கும் நிதியை தேவையான திட்டங்களுக்கு
வழங்கவோ அதிகாரம் இல்லை.
·
இந்த அதிகாரமும் பஞ்சாயத்துத் தலைவருக்கு மட்டுமே. பலவிடங்களில்
தலைவர் யாரையும் கலந்தாலோசிக்காமல் தானே முடிவுகளை எடுத்துவிடுகிறார்.
·
கிராம சபையால் தலைவருக்கு ஆலோசனை மட்டுமே கொடுக்க முடியும். அந்த
ஆலோசனைகளை ஏற்பதா வேண்டாமா என்பது தலைவரின் விருப்பம்.
இதன் விளைவாக பஞ்சாயத்துத் தலைவர்களே ஊழல் செய்ய ஆரம்பித்தார்கள்.
மக்களால் அவர்களை தட்டிக் கேட்க முடியவில்லை. தடுக்கவும் முடியவில்லை. வாயை
மூடிக்கொண்டு பார்த்துக் கொண்டிருக்க வேண்டியதுதான்.
பஞ்சாயத்துத் தலைவர்களின் மேல் நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் மாவட்ட
ஆட்சியாளருக்கு உண்டு. மாநிலங்களில் கவர்னர்கள் மத்திய அரசின் பிரதிநிதியாகச்
செயல்படுவது போல, மாவட்டங்களில் மாநிலத்தின் சார்பில் செயல்படுபவர் மாவட்ட
ஆட்சியாளர். கவர்னர்களுக்குப் பெரிதாக அதிகாரம் கிடையாது. ஆனால் மாவட்ட
ஆட்சியாளர்களுக்கு பஞ்சாயத்தில் செயல்பாட்டில் அளவற்ற அதிகாரம் உண்டு. ஆனால்
இவர்களால் ஒன்றும் செய்யமுடியாத அளவிற்கு மாநில அரசுகள் பஞ்சாயத்து விவகாரங்களில்
தொல்லை கொடுத்துக் கொண்டேயிருக்கிறார்கள்.
ஒரு உதாரணம் பார்ப்போம்:
ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு துறை என்று வந்தபின் இந்தத் துறை பற்றை
அந்தத்துறை பற்றிய கவலை இல்லை. அவர்களைப் பற்றி இவர்களுக்குக் கவலையில்லை.ஒவ்வொரு
துறைக்கும் தங்களுக்கென்று நிர்ணயிக்கப்பட்ட இலக்கை அடைய வேண்டும். யார் எப்படிப்
போனால் எனக்கென்ன என்ற மனோபாவம்!
ஹரியானாவில் போண்ட்ஸி என்று ஒரு கிராமம். இந்தக் கிராமத்தில் மரங்கள் குறைவாக இருக்கிறது என்று சொல்லி மரம் நடும்
திட்டம் ஒன்று போடப்பட்டது. வனத்துறையினரின் முயற்சி இது. இந்தத் திட்டத்தை
செயல்படுத்த ஹெலிகாப்டர் மூலம் அந்தக் கிராமம் முழுவதும் கருவேல மரங்களின் விதைகள்
தூவப்பட்டன. என்ன அநியாயம் இது என்று கூச்சலிடத் தோன்றுகிறது, இல்லையா? என்ன
செய்வது இந்த மரங்கள் குறைந்த காலத்தில் அதிவேகமாக வளரக்கூடியவை. அரசு நிர்ணயித்த
இலக்கை எட்ட இந்த மரங்கள் தான் நடப்பட வேண்டும். இந்த மரங்கள் அதிவேகமாக
வளரக்கூடியவை மட்டுமல்ல; அந்த நிலத்தில் இருக்கும் நீரை உறிஞ்சி விடும் தன்மை
உடையவை. வெகு சீக்கிரமே அந்தப் பகுதியில் நிலத்தடி நீர் குறைந்து வரட்சிப்
பகுதியாயிற்று. மண்வளம், நீர் வளம், பயிர்கள், பாசனம் என்று எல்லா துறைகளும்
கைக்கோர்த்து செய்திருக்க வேண்டிய காரியம் இது. ஒரு நல்ல செயல், சரியான புரிதல் இல்லாமையாலும்,
மற்றவரை ஆலோசித்து செயல்படும் மனப்பாங்கு இல்லாததாலும் தீமையே விளைந்தது.
பஞ்சாயத் ராஜ்களின் நிலை இது.
மேலும் பார்ப்போம்.....